'கோமாளி' ட்ரெய்லரில் வரும் இறுதிக் காட்சி, ரஜினியைக் கிண்டல் செய்வது போல் இருப்பது தனக்கு காமெடியாகத் தெரியவில்லை என்று தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார் கமல்.
ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோமாளி'. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவியின் கெட்டப்கள், பாடல் வரிகள் என இந்தப் படத்துக்கு சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆகஸ்ட் 3-ம் தேதி இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது.
இந்த ட்ரெய்லரின் இறுதிக் காட்சி ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதைக் கிண்டல் செய்வது போல் இருந்தது. இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் 'கோமாளி' ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு கமல், அதன் தயாரிப்பாளருக்கு தொலைபேசி வாயிலாக தன் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது ட்விட்டர் பதிவில், “நம்மவர் இன்று காலை கோமாளி ட்ரைலர் பார்த்தார்.
அதில் ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றிய விமர்சனத்தைப் பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்குப் போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடா.. நியாயத்தின் குரலா.." என்று தெரிவித்துள்ளார்.
'கோமாளி' படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ், ரஜினி - கமல் இருவருக்கும் நெருங்கிய நண்பராக வலம் வருகிறார். கமல் அதிருப்தி தெரிவித்திருப்பதால், படத்திலிருந்து அந்தக் காட்சியை நீக்கிவிடுவார்கள் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment